Sunday, February 16, 2014

அம்மா கதை:

அம்மா இந்தக் கதையை என் சின்ன வயதில் சொன்னாள். இன்றைக்கும் மறக்க முடியாமல் அது வாழ்வினூடே தொடர்ந்து பயணிக்கிறது.

ஒரு ஊரில் ஒரு மகன் சதா கெட்ட வார்த்தைகளால் அடுத்தவர் மனதை புண்படுத்தி வருத்திக்கொண்டிருந்தான். அதைப் பார்த்த அப்பாவுக்கு மன வேதனை. ஒரு நாள் மகனைக் கூப்பிட்டு நீ எப்பொழுதெல்லாம் ஒருவரை புண்படுத்துகிறாயோ அப்பொழுதெல்லாம் நம் வீட்டிற்கு பின்னாலிருக்கின்ற மரத்தில் இந்த ஆணியை அடி என்று ஒரு பை நிறைய ஆணிகளைக் கொடுத்தார். அவனும் சரி என்று செய்துவந்தான்.

ஒரு நாள், மரத்தில் அடிக்க முடியாத அளவுக்கு ஆணிகள் நிறைந்து விட்டது.
மகன் அப்பாவிடம் வந்து சொன்னான், "அப்பா நான் இன்னும் ஒரு ஆணி கூட அடிக்க முடியாத அளவுக்கு மரம் நிறைந்து விட்டது. நான் இத்தனை பேரை மனம் புண்படும் படியா பேசி இருக்கிறேன்" என்று வருந்தினான். 

அப்பா ஒரு பரிகாரம் சொன்னார். "சரி. நீ எப்பொழுதெல்லாம் நீ வருதப்படச் செய்தவர்களை மகிழ்ச்சிப் படுத்துகிறாயோ அப்பொழுதெல்லாம் மரத்தில் இருந்து ஒரு ஆணியைப் புடுங்கிவிடு" என்று சொன்னார். மகனும் அவ்வாறே செய்து வந்தான்.

ஒரு நாள், மரத்தில் ஒரு ஆணிகூட இல்லை. மகனுக்கு ஒரே சந்தோசம்.
தன் அப்பாவைக் கூட்டி வந்து மரத்தின் முன் நிறுத்தி சொன்னான், "அப்பா இங்கே பாருங்கள் மரத்தில் ஒரு ஆணி கூட இல்லை. நான் வருதப்படச் செய்த எல்லோரையும் நான் மகிழ்ச்சிப் படுத்திவிட்டேன். நான் இப்போது முழுவதும் நல்லவனாக மாறிவிட்டேன்" என்றான்.

அப்பா சிரித்துக் கொண்டே சொன்னார், "அந்த மரத்தைப் பார். எப்படி கோரமாக ஆணித்தழும்பேறி சிதைந்திருக்கிறது. அந்த மரத்தை பசுமையாக முன்போல் உன்னால் எப்பொழுதும் மாற்ற முடியாது. அது போல் நீ வருதப்படச் செய்தவர்களை மகிழ்ச்சிப் பட வைத்து விட்டாலும், நீ ஏற்படுத்திய அந்த வேதனைத் தழும்பு என்றும் அவர்கள் மனதில் இருந்து கொண்டேதான் இருக்கும்".

மகனுக்கு அப்போது தான் புரிந்தது தான் செய்து வந்த தவறு !!! 

Friday, February 14, 2014

பிபரவரி 14

இன்னைக்கு காலைல 9 மணிக்கு அப்பாட்ட இருந்து போன் வந்துச்சு.

"ஏய் மண்டத்தல...என்னடா பண்ணிட்ருக்க?"

"இப்பதாம்ப என்துருச்சேன்"

"இப்பதான் எந்துருச்சயா? கோயிலுக்குப் போகுல?"

"எதுக்குப்பா?"

"இன்னைக்கு என்ன கெழம?"

"வெள்ளிக் கெழம...அதுக்கு எதுக்கு கோயிலுக்குப் போகணும்? எதுனா விசேசமா?"

"நல்லா யோசிச்சு பாரு"

"இருங்க காலண்டர பாக்கறேன்....ஹ்ம்ம்...அட இன்னைக்கு பவுர்ணமி...அதுக்கா?"

"இல்ல...நல்ல யோசிடே..."

"ஆமா இது மாசி பவுர்ணமி தான...சித்ரா பவுர்ணமி கூட இல்லையே...ஹ்ம்ம். உங்க கலியாண நாளா?"

"இல்ல"

"அட ஆமா...அது மாசி 4 தானே...இன்னக்கு ரெண்டுதானே ஆச்சு...ஹ்ம்ம்..தெரிலப்பா நீங்களே சொல்லுங்க"

"அட அறிவுகெட்ட லூசு பயலே..இன்னைக்கு பிபரவரி 14...காதலர் தினம்..போயி ரெண்டு பேரும் சீரும் சிறப்புமா இன்னைக்கும் போல என்னைக்கும் இருக்கணும்னு சாமி கும்புட்டுட்டு வாங்க!!!"

"யப்போய்...இது என்ன திருவிழாவா...நீரு டிவி பாத்து ரொம்பதான் கெட்டுடீரு"

"சரி சரி காதலர் தின வாழ்த்துக்கள்!!!

"நல்லதாப் போச்சு போங்க!!"

கட்!!


Tuesday, February 11, 2014

கல்வி வியாபாரம்:

கடந்த வாரம் "பிராயிலர் பள்ளிகள்" என்ற தலைப்பில் விகடனில் பாரதி தம்பி எழுதியிருந்த நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகள் பற்றிய கட்டுரை மேல் தட்டு மற்றும் உயர் நடுத்தர வர்கத்தின் பணத்தைக் கொட்டி படிக்க வைக்கும் திறன் பற்றியும் இந்த பள்ளிகளால் தத்து எடுக்கப்பட்டு, அங்கே நடக்கின்ற கொடுமை தாளாமல்  உயிரை மாய்த்துக்கொண்ட "நன்றாய்" படிக்கும் ஏழை மாணவர்கள் பற்றியும் அலசி ஆராய்ந்திருந்தது.

ஒரு சாதாரண அரசு துவக்கப்பள்ளியிலும் மற்றும் அரசு உதவிபெறும் கிருத்தவ மேலாண்மைப் பள்ளியிலும் (இலவசமாக அல்லது அதிக  பட்சம் ஆயிரம் ரூபாய் செலுத்தி)தமிழ் வழிப் பயின்று என்னால் ஓரளவு இந்த சமுதாயத்தில் தாக்குப்பிடித்து முன்னேற முடிகிற போது இலட்சங்களில் கொண்டுபோய் கொட்டும் இன்றைய அவலம் மிகுந்த மன வேதனை தருகிறது.

இந்த கொடுமைக்கார தனியார் பள்ளிகளை விட சிறந்த அரசு மாதிரிப் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைத்து  அவர்களை நல்ல மனிதர்களாக இந்த சமுதாயத்திற்கு தர முயல வேண்டுமே அன்றி வெறும் பணம் பண்ணும் இயந்திரங்களாக  அல்ல. நண்பர்களே சிந்தியுங்கள்!!

நாயர் மெஸ் (Nair Mess):

நாயர் மெஸ் (Nair Mess):

கடந்த இரண்டு வாரங்களாக எழுதவில்லையே தவிர கடைக்குப் போய் சாப்பிடாமல் இல்லை. திருப்பூர் போக, போன சனிக்கிழமை மாலை 5:30 மங்களூர் எக்ஸ்பிரஸை தவறவிட்டு, நடப்புப் பயணச் சீட்டில் பதிந்த பொழுது இரவு  8:45 ஆழப்பி எக்ஸ்பிரஸ் தான் கிடைத்தது :(.

மூன்று மணிநேரம் "தேமே" என்று சென்ட்ரல் ஸ்டேஷனில் விஜய் சேதுபதி சொல்லும் அறிவுரையை யார் கேட்பது என்று யோசித்த போது, திருவல்லிக்கேணி "நாயர் மெஸ்" இல் போய் சாப்பிட்டு வந்தால் என்ன என்று தோன்றியது. கிரீன் சிக்னல் கிடைக்க பத்து நிமிடத்தில் மெசில் ஆஜர்.

சேப்பாக்கம் ஸ்டேடியம் போனவர்கள் யாரும் நாயர் மெஸை அறியாமல் இருக்க மாட்டார்கள். பெல்ஸ் ரோட்டில் ஸ்டேடுயத்திற்கு எதிரில் உள்ள பஸ் ஸ்டாண்டை ஒட்டிய சந்தில் நாலாவது கடை. மெஸ் என்றால் "மெஸ்"  இல்லை. நல்ல தரமான "உயர் தர" உணவகம் தான்.

நல்ல குருவாயூர் சந்தனம் வைத்த "சேட்டன்" தான் ஆர்டர் எடுத்தார். ஸ்பெஷல் என்னவென்று கேட்க, சிக்கன் சாப்ஸ், சிக்கன் பாயா, பொரிச்ச வாவல் மீன், வஞ்சிரம், ஈரல், மட்டன் சுக்கா, சிக்கன் வறுவல் என அடுக்கினார். இட்லிக்கு மாட்சாக சிக்கன் சாப்சும் சைட் டிஷாக வஞ்சிரமும் சாப்பிட்டோம். வஞ்சிரம் வித்தியாசமாக சிவப்பு நிறத்தில் இல்லாமல் ப்ரௌன் நிறத்தில் மொருவலாக இருந்தது. கேரள தேசத்தின் ஸ்பெஷல் போல.

சாப்பிட்டு முடித்ததும் ஜீரா வாட்டர் தந்தார்கள். கல்லூரி ஞாபகம் வந்தது :)

மொத்தத்தில் அருமையான இரவு உணவு. கடைசியாக வெளியே வந்ததும் தான் சொன்னாள்,

"இங்கே பிரயாணி நன்றாய் இருக்கும்"

"உனக்கு எப்படி தெரியும்?"

"நான் அஞ்சு வருசமா இதே தெருமுனைல இருக்கற ஹாஸ்டல்ல தான இருந்தேன்"

"???!!!"




Saturday, January 25, 2014

தாத்தா கதை

தாத்தா என்றாலே எனக்கு ஞாபகம் வருவது "கதை" தான். சின்ன வயசில்  "தாத்தா.. ஒரு கதை சொல்லு ...ஒரே ஒரு கதை சொல்லு" என்று நாம் தாத்தாவை நச்சரித்திருக்கலாம்.

வயதுவந்த பிறகு கல்லூரி காலத்திலிருந்தே  நண்பர்களுக்கு பல "நல்ல" கதைகளை நான் சொல்லிவந்த்திருக்கிறேன். அதற்க்குக் காரணம் நம்ம கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தாத்தாதான். அவரை இந்த மாதத்தில் ஒரு நாள் சந்தித்து நேரடியாகக் கதை கேக்கலாம் என்றிருக்கிறேன்.

அவர மாறி ஒரு நல்ல கதை சொல்லி வேறயாரமில்ல!! மனுசன படிக்கும் போதே அவரு நம்ம முன்னாடி உக்காந்து கதை சொல்லற மாறித்தான்  இருக்கும். அவரு எனக்கு பக்கத்தில இல்லாத சேக்காளியாத்தான் இன்னமும் இருக்காரு.

நிற்க!

மீன் உணவகம் - தமிழ் நாடு மீன் வளர்ச்சி கழகம்

இன்று சத்தியம் தியேட்டரில் "ரோனின்" (RONIN) என்ற படத்தை பாதியிலிருந்து பார்த்துவிட்டு மதியம் 2:30 க்கு வெளியே வந்தபோது "கொலைப்பசி". எங்கே போகலாம் என்று யோசித்தபோது டக்கென ஞாபகம் வந்தது தேனாம்பேட்டையில் உள்ள தமிழக மீன் வளர்ச்சித்துறையின் "மீன் உணவகம்". ரொம்ப நாளாக இங்கே சாப்பிடவேண்டும் என்று நினைத்தது இன்று அமைந்துவிட்டது.

அட்டகாசமான மீன் பிரியாணி, வஞ்சிரம் மீன் மற்றும் பிஷ் பிங்கரை ஒரு பிடி பிடித்தோம். மொத்தம் 390 ரூ தான். குறைந்த விலையில் நறைந்த தரத்தை சாப்பிட்டு முடித்ததும் உணரலாம்.

இதுபோக இறால் பிரியாணி, இறால் வறுவல், நண்டு வறுவல் மற்றும் கணவை என பல கடல் பிராணிகளின் உணவு அணிவரிசை நீள்கிறது. (காண்க: விலைப்பட்டியல்). மதியம் புல் மீல்ஸ் உண்டு (மீன் குழம்பு).

ஒரு குறை என்னவென்றால் நின்று கொண்டே சாப்பிடவேண்டும். பரவாயில்லை ருசிக்கு நின்று கொண்டே கூட சாப்பிடலாம். 

அருகிலேயே மீன்விற்பனை நிலையமும் உண்டு. சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு சமையல் செய்ய வாங்கியும் செல்லலாம்.

இடம்: தேனாம்பேட்டை, மத்திய கணக்காயர் அலுவலகம் அருகில்.
(கவர்ன்மெண்ட் கடை என நினைக்க வேண்டாம். ருசிக்கு நான் கியரண்டி)



Thursday, January 23, 2014

ஜில்லா-வீரம்

கடந்த இரண்டு நாட்களாக வீரம், ஜில்லா  போன்ற காலத்தால் அழியாதப் படங்களை (சாரி நான் சரியாதான் எழுதுகிறேனா !!??) இல்லை இல்லை குப்பைகளை அரங்கில் பார்க்க நேர்ந்ந்தது. (தல தளபதி ரசிகர்கள் மன்னிக்கவும் நான் இங்கே படத்தை மட்டுமே சொல்கிறேன்). ஒரு திரைப்படம் என்பது ரசிகனை தனக்குள்ளே இழுத்துக்கொள்ளவேண்டும் ஒரு புத்தகம் போல (உ.ம் : பீட்சா, சூது கவ்வும்). 

வீரத்தில் தூங்கிவிட்டேன். அருத பழசான கதை, திரைக்கதை. நடிகர்கள் மட்டும்  வேறு . மனதில் ஒட்டாத ஒரு பாசத்தை இருக்கு இருக்கு என்று சொல்லி நம்மளை சாகடிக்கிறார் டைரக்டர்.  இந்த மொக்கை வில்லன்களும் 
நம்மளை கடுப்படிக்கிறார்கள். அடிப்பதற்கு பதிலாக கடிப்பதற்கு வசனம் கொடுத்திருக்கிறார் டைரக்டர். கடைசி சீனில் அரைமணி நேரம் பேசுகிறான் வில்லன். படத்தில் பிடித்தது அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் மட்டுமே.

ஜில்லாவில் ஒவ்வொரு பாட்டும்  வரும் போதும் "என்ன விடுங்கடா" என்று மனசுக்குள் தோணிகொண்டே இருந்தது. ஒரு சீனுக்கும் அடுத்த சீனுக்கும் தொடர்ச்சி அற்று ஒண்ணுமே புரியாமல் விழிக்கும் போது கடைசில வில்லன் வந்து இப்படி கனெக்ட் பண்ணி பாருங்க என்று நமக்கும் விஜயைக்கும் சொல்கிறார். அப்பாடா படம் முடுஞ்சிருச்சின்னு நினைக்கும் போது "இனி தான் ஆரம்பம்" என்று வில்லனும் விஜயும் நமக்கு புரிய வைக்கிறார்கள். அடுத்த அரைமணி நேரத்தில் ரசித்த ஒரே விஷயம் "கம்ப்ளீட் ஆக்டர்" மோகன் லால் நடிப்பு மட்டுமே. கடைசியாக டைரெக்டரின்  கார்ட் வேறு வருகிறது. ஹும் இது தேவையா?

ஆனால் வீரத்திற்கு ஜில்லா பரவால்ல/.

நிற்க.

Wednesday, January 22, 2014

ரெட் ஈ

நேற்று இரவு மூப்பனார் பாலத்திற்கு அருகில் உள்ள (நந்தனம் சிக்னலிலிருந்து வரும்போது செனடாப் ரோட்டில் 200 மீ இல் வலதுபுறம் வரும் HDFC வங்கிக்கு அடுத்த கடை. கோட்டூர்புரத்திலிருந்து வரும்போது பாலத்தின் முடிவில் இடதுபக்கம் வரும்) "ரெட் ஈ" இல் சாப்பிட்டோம். அந்த ஏரியாவில் உள்ள சாப்பட்டுக்கடைகளில்  சீப் அண்ட் பெஸ்ட் இதுதான். ஆந்திரா சிக்கனும் மட்டன் சுக்காவும் செப்ஸ் ஸ்பெஷல். சாப்பிட்டதில் மிகவும் பிடித்தது "ஹாட் அண்ட் சௌர்" சிக்கன் சூப். நல்ல ருசி. மெயின் அயிட்டத்தில் கொல்கத்தா பிரியாணி நன்று. இந்தியன் தவிர சைனீஸ் மற்றும் தாய் உணவுவகைகளும் உள்ளது. காண்டினண்டலையும் கொஞ்சம் ரசிக்கலாம். கடைசியாக வீட்டு குல்பி காரமாய் சாப்பிட்டதற்கு இதமாய் இருந்தது.

ஒரு விஷயம். இங்கு கிச்சனை மறைத்துவைக்கவில்ல மாறாக வாடிக்கையாளர்கள் பார்க்க வசதியாக கண்ணாடி தடுப்பு அமைத்திருக்கிறார்கள். நல்ல சுத்தம்.







Tuesday, January 21, 2014

பார்பிகியூநேஷன்: (பாபிகணேசன்):

இன்று மதியம் வடபழனி 100 ரோட்டில் உள்ள "பாபிகணேசன்" மன்னிக்கவும், "பார்பிகியூநேஷன்" இல் நண்பர் விவேகானந்தன் தயவால் விருந்து உண்டோம். சிறப்பான மீன், கோழி, இறால், மட்டன் வகையறாக்கள் தீயில் வாட்டி பறிமாறபட்டன. சைவத்தில் குடைமிளகாய், அன்னாச்சி மற்றும் பன்னீர் நன்றாக இருந்தது. தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ், மாங்காய் மிளகாய் சாஸ் மற்றும் தயிர்கடுகு சாஸ் தரப்பட்டது. தவிர மேற்தடவிகளாக எலுமிச்சை சாறு , குறுமிளகு சாறு நன்றாய் இருந்தது.

பப்பேயில், சிக்கன் பிரியாணி, சைவத்தில் தயிர் சாதம் அருமை. மற்றவை ஓகே ரகம். இனிப்பில் குலோப் ஜாமூன் சூப்பர்.

என்ன கொஞ்சம் காஸ்ட்லி. அசைவம் 750 ரூ. சைவம் 650 ரூ (வரி உட்பட)








Monday, January 20, 2014

கோழி இட்லிக் கடை


இன்று அவ்வை சண்முகம் சாலை (லயட்சு ரோடு) முதல் லேன் - அ .இ .அ .தி .மு .க தலைமை அலுவலகத்திற்கு எதிரில் உள்ள - "கோழி இட்லி" கடையில் சாப்பிட்டோம். இட்லிக்கு கோழிக்குழம்பு என்பது ஒரு அட்டகாசமான காம்பினேஷன். 3 இட்லி + ஒரு கப் குழம்பு (2 பீஸ்) வெறும் 60 ரூ தான். கோழிக் குழம்பு  என் பாட்டியின் தீபாவளி ஸ்பெஷல் இட்லி + கறி குழம்பை ஞாபகப்படுத்திவிட்டது. சைவர்களுக்கு பூண்டு மிளகாய் துவையலும் தக்காளிச் சட்டுனியும் உண்டு. வெறும் 30 ரூ தான். ஒரு குறை சிறிய கடை ஆனாலும் சவுகரியமாக இருந்தது.





Sunday, January 19, 2014

மதுரை பாண்டி விலாஸ்

பெரும்பாடுபட்டும் மயிலை - ஆர்.கே.மடம் சாலை"டவுசர்" சாப்பட்டுக்கடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பதிலாக மதுரை பாண்டி விலாசில் பார்சல் வாங்கி சாப்பிட்டோம். யாராவது விலாசம் தெரிந்தால் சொல்லவும். 

மயிலை "மாமி" மெஸ்

கடந்த வாரம் மயிலை "மாமி" மெஸில் பாகற்காய் சாதம், கத்தரிக்காய் சாதம், கீரை சாதம், காரக்குழம்பு சாதம் சாப்பிட்டோம். மலிவு விலையில் அருமையான சிற்றுண்டி. விலாசம்: கபாலி கோயில் முன் நின்று யாரைக் கேட்டாலும் சொல்வர். 2 நிமிட நடை. (படத்தில் இருப்பது மாமி தான்.) 

சைதாப்பேட்டை மாரி(முத்துத்தேவர்) ஓட்டல்

சைதாப்பேட்டை மாரி(முத்துத்தேவர்) ஓட்டல் "வடைகறி" யை இன்று ருசித்தேன். அருமை. விலாசம்: வி.எஸ்.முதலி தெரு. மாரி ஒட்டலை யாரைக்கேட்டாலும் சொல்வர். நன்றி: கேபிள் சங்கர் / சாப்பாட்டுக்கடை