தைப் பொங்கலின் மூன்றாம் நாள் "பூப்பறித்தல்" என்ற கொண்டாட்டம் கொங்குவட்டாரத்தில் பிரபலம்.பால்யத்தில் முதல் முறையாக அதைக் கொண்டாட முன் மாட்டியிருக்கும் தற்காலிக இருக்கையில் நானும் பின்சீட்டில் என் தங்கையைக் கையில் ஏந்திக் கொண்டு அம்மாவும் உட்கார்ந்திருக்க 3 கி.மீ தாண்டியிருக்கும் நகரப் பூங்காவிற்கு தன் சைக்கிளை மிதிக்கலானார் அப்பா.
வழி நெடுக, "அம்மா.. செடியில நெறைய பூ பூத்திருக்குமா? அப்பா.. என்ன என்ன பூ இருக்கும்? ரோஜா பூவா? முல்லைப் பூவா? பறிக்கற பூவுல எனக்குப் பாதி அவளுக்குப் பாதி சரி தானே? " என்று நான்கேட்டுக்கொண்டே வந்தேன். அப்பாவும் அம்மாவும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள். எனக்குப் புரிந்திருக்கவில்லை.
நகரப் பூங்கா - திருப்பூர் நகராட்சி. லுமினன்ட் எழுத்துக்களில் அழுக்கேறியிருந்தது. பக்கத்தில் நொய்யல், சாயக் கழிவுகளை விழுங்கி ஹைட்ரஜன் சல்பைடை பரவ விட்டுக் கொண்டிருந்தது. எங்களை பூங்கா வாசலில் இறக்கி விட்டு விட்டு சைக்கிளை ஓரத்தில் இருந்த ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு வந்தார் அப்பா. நீண்ட வரிசையில் நின்று பெரியவருக்கு ரூ1 , சிறியவர் பைசா 50 எழுதியிருந்த சுவற்றின் ஓட்டைக்குள் கைகொடுத்து 3 நுழைவுச் சீட்டுகள் பெறப்பட்டன. தங்கைக்கு இல்லை.
பூங்காவில் நுழைந்தவுடன் மனிதக் கூட்டத்தை ஊடுருவித் தேடிக்கொண்டிருந்தேன். அங்கங்கே சிலர் அமர்ந்து கரும்பு கடித்துக் கொண்டிருந்தார்கள். வாட்டர் பவுண்டன் என்றிருந்த தொட்டியிலிருந்து இரண்டு தவளைகள் எட்டிப் பார்த்து கொண்டிருந்தன.என் வயதை ஒத்த சிறுவர்கள் அதைவேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் குழாய் அடியில் தண்ணீர்ச் சண்டை. அதை ஒட்டி பெப்சி ஐஸ் விற்று கொண்டிருந்தவரைச் சுற்றி நான்கைந்து பேர் நச்சிக்கொண்டிருந்தர்கள்.ஒரு நாய் ஓரத்தில் கிடந்த குப்பையைக் கிழறிக் கொண்டிருந்தது.
சற்றே தூரத்தில் ஒரே ஒரு சறுக்கு விளையாட்டு மட்டும் இருந்தது. ஒரு பெரும் கூட்டம். எனக்கு ஆர்வமில்லை. அம்மாவும் அப்பாவும் ஒரு நீள் இருக்கையில் உட்கார்ந்து, கொண்டுபோன முறுக்கையும் கரும்பையும் எடுக்க, நான் ஒரே அழுகை. தங்கை என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
"எனக்குப் பூவேணும்.. பூவேணும்.. "
தேடிய மட்டும் பூவும் இல்லை..அதைப் பரிப்பாரும் இல்லை. அழுது கொண்டே ஒரு கையில் முறுக்கையும் மறு கையில் கரும்பையும் பிடித்து, கடையில் வாங்கிய அரை முழம் கனகாம்பரப் பூவைத் தலையில் தரித்து நான் அம்மா மடியில் பின்புறம் உட்கார தங்கை முன்புறம் உட்கார சைக்கிளை வீட்டுக்கு மிதிக்கலானர் அப்பா.
அன்றிலிருந்து "பூப்பறித்தல்" என்றாலே ஏமாற்றம்.. ஏமாற்றம் மட்டுமே மிஞ்சி இருந்தது. அதற்கு ஏன் அப்படி பெயர் வைத்தார்கள்..ஏமாற்றுவதற்கா? இல்லை நானே புரியாமல் அத்தகைய அபத்த அர்த்தத்தைக் கற்பித்துக் கொண்டேனா? இன்று வரை அப்படிப்பட்ட பெயர் கொண்டு ஏன் அந்த நாள் கொண்டடப்படிகிறது என்று விளங்க வில்லை. யாராவது பதில் தெரிந்தால் சொல்லவும்.
நிற்க.
மேற்கண்டவிடயத்தைச் சொல்லுவதற்குக் காரணமுண்டு. இங்கே ஜப்பானில் போன வாரம் "பூக்காணுதல்" திருவிழா. ஜப்பானியப்பெயர் - "ஒஹனாமீ".
ஒ - மரியாதை நிமித்தமாக ஒரு செயலின் முன் ஒட்டிக்கொள்ளும் எழுத்து. திரு, திருமதி, செல்வி, செல்வன் போல.
ஹனா - பூ
மீ - பார்த்தல் அல்லது பார்.
என்று பெயர் காரணம் சொல்லி போகலாமா என்றார் நண்பர். "பூப்பறித்தல்" தான் ஞாபகம் வந்தது. :-(
அதுவும் ஒரு பூங்கா தான். பெயர் "Shijuku kohein" (ஷிஞ்சுக்கூ பூங்கா). ஜாக்கிசான் நடித்து வெற்றி நடை போட்ட, போட்டுக் கொண்டிருக்கும் "Shinjukku Incident" எடுக்கப்பட்ட அதே ஏரியாவில் தான் என்று மார்க்கெட்டிங் வேறு. சரி போய் தான் பார்ப்போமே என்று கிளம்பினோம். ஏமாற்றமில்லை.
ஊதாவும் வெள்ளையும் வெளிர் சிவப்புமாய் மரமெல்லாம் பூக்கள். மனம் ஒரு மாய மலர் உலகத்தில் லயித்து அடங்குவதற்கு நேரம் பிடித்தது. காணக் கண் கோடி வேண்டும். பெயருக்கேற்ற திருவிழாதான்.
குறிப்பு: அங்கும் மரத்திற்குக் கீழே தரையில் பாய் விரித்து குடும்பம் குடும்பமாய் தண்ணி அடித்துக் கொண்டிருந்தார்கள் ஜப்பானிய குடிமக்கள் :-)
படங்கள்: வீட்டுக்குப் பின்புறப் பூங்கா (பெயர் தெரியவில்லை). நன்றி: நண்பர் பிரசாத்.


