அம்மா இந்தக் கதையை என் சின்ன வயதில் சொன்னாள். இன்றைக்கும் மறக்க முடியாமல் அது வாழ்வினூடே தொடர்ந்து பயணிக்கிறது.
ஒரு ஊரில் ஒரு மகன் சதா கெட்ட வார்த்தைகளால் அடுத்தவர் மனதை புண்படுத்தி வருத்திக்கொண்டிருந்தான். அதைப் பார்த்த அப்பாவுக்கு மன வேதனை. ஒரு நாள் மகனைக் கூப்பிட்டு நீ எப்பொழுதெல்லாம் ஒருவரை புண்படுத்துகிறாயோ அப்பொழுதெல்லாம் நம் வீட்டிற்கு பின்னாலிருக்கின்ற மரத்தில் இந்த ஆணியை அடி என்று ஒரு பை நிறைய ஆணிகளைக் கொடுத்தார். அவனும் சரி என்று செய்துவந்தான்.
ஒரு நாள், மரத்தில் அடிக்க முடியாத அளவுக்கு ஆணிகள் நிறைந்து விட்டது.
மகன் அப்பாவிடம் வந்து சொன்னான், "அப்பா நான் இன்னும் ஒரு ஆணி கூட அடிக்க முடியாத அளவுக்கு மரம் நிறைந்து விட்டது. நான் இத்தனை பேரை மனம் புண்படும் படியா பேசி இருக்கிறேன்" என்று வருந்தினான்.
அப்பா ஒரு பரிகாரம் சொன்னார். "சரி. நீ எப்பொழுதெல்லாம் நீ வருதப்படச் செய்தவர்களை மகிழ்ச்சிப் படுத்துகிறாயோ அப்பொழுதெல்லாம் மரத்தில் இருந்து ஒரு ஆணியைப் புடுங்கிவிடு" என்று சொன்னார். மகனும் அவ்வாறே செய்து வந்தான்.
ஒரு நாள், மரத்தில் ஒரு ஆணிகூட இல்லை. மகனுக்கு ஒரே சந்தோசம்.
தன் அப்பாவைக் கூட்டி வந்து மரத்தின் முன் நிறுத்தி சொன்னான், "அப்பா இங்கே பாருங்கள் மரத்தில் ஒரு ஆணி கூட இல்லை. நான் வருதப்படச் செய்த எல்லோரையும் நான் மகிழ்ச்சிப் படுத்திவிட்டேன். நான் இப்போது முழுவதும் நல்லவனாக மாறிவிட்டேன்" என்றான்.
அப்பா சிரித்துக் கொண்டே சொன்னார், "அந்த மரத்தைப் பார். எப்படி கோரமாக ஆணித்தழும்பேறி சிதைந்திருக்கிறது. அந்த மரத்தை பசுமையாக முன்போல் உன்னால் எப்பொழுதும் மாற்ற முடியாது. அது போல் நீ வருதப்படச் செய்தவர்களை மகிழ்ச்சிப் பட வைத்து விட்டாலும், நீ ஏற்படுத்திய அந்த வேதனைத் தழும்பு என்றும் அவர்கள் மனதில் இருந்து கொண்டேதான் இருக்கும்".
மகனுக்கு அப்போது தான் புரிந்தது தான் செய்து வந்த தவறு !!!
No comments:
Post a Comment