நான் இலக்கியப் புத்தகம்(?!!) என்று படிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிறது. பத்தாவது படிக்கும் போது நாங்கள் வாடகைக்குக் குடியிருந்த வீட்டுக்கார அம்மாவின் அண்ணன் அவர் படித்தப் புத்தகங்களை எல்லாம் வீட்டு அட்டாரியில் போட்டு வைக்கச் சொல்லி பல பெட்டிகளைக் கொண்டு வந்து வீட்டு வாசலில் அடிக்கி விட்டுப் போனார்.
அவர் ஒரு காவல் அதிகாரி. அவரின் மனைவி எல்லா புத்தகங்களையும் வீட்டை அடைக்கிறது என்று எடைக்குப் போடப் போனாராம். மனுஷன் அடித்து பிடித்து மனைவுக்குத் தெரியாமல் எல்லாவற்றையும் பெட்டிகளில் போட்டு ஐம்பது
கிலோ மீட்டர் பயணம் செய்து தங்கை வீட்டுக்குக் கொண்டுவந்து பத்திரமாக வை என்று சொல்லிச் சேர்ப்பித்திருந்தார். யாராவது கேட்டால் படிக்கக் குடுக்கலாம். ஆனால் புத்தகம் அதே நிலையில் திரும்பப் பெறப்பட வேண்டும் என்பது நிபந்தனை.
பள்ளி விட்டு வீடு வந்தவுடன் அம்மா புத்தக பொட்டிக் கதையை என்னிடம் சொல்லி முடிக்க நான் வீட்டுக்கார அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி அலமாரி மேல் ஏறி ஒரு பெட்டியைக் கீழே இறக்கினேன்.பெட்டியைத் திறந்தவுடன் "ஆனந்த விகடன் 1965 - 1966" என்று அந்த வருடத்தைய எல்லா இதழ்களும் தொகுக்கப்பட்டு அருமையாய்ப் பைண்டு செய்யபட்டிருந்தது. புத்தகத்தின் கடைசியில் "படித்து விட்டு பத்திரமாக திருப்பி தரவும்" என்று எழுதி, தமிழில் ஏதோ கையொப்பம். பெட்டியில் கிட்டதட்ட முப்பது முதல் ஐம்பது புத்தகங்கள் இருந்திருக்கும். அடுத்தடுத்த புத்தகங்களை நோட்டம் பார்க்க பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், யவன ராணி, சேரன் செல்வி,சில நேரங்களில் சில மனிதர்கள் என்று பைண்டு செய்யப்பட்ட 1970 , 80 களில் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் நீண்டது.
அட்ரா சக்கைன்னேன்.நான் அப்போது தான் விகடன் படிக்க ஆரம்பித்திருந்த நேரம். அதுவும் என்னுடைய நண்பனின் வீட்டுக்கு இதற்காகவே ஞாயிறுகளில் காலையிலேயே ஆஜராகிவிடுவேன். பல வருடமாக விகடன் வாங்கும் குடும்பம். சிறுகதைகள், கவிதைகள் என்று படிக்க ஆரம்பித்து, படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டிருந்த நேரத்தில் ஒட்டு மொத்தமாக அத்தனை புத்தகங்களையும் பார்த்த எனக்கு மகிழ்ச்சி தாளவில்லை. வீடுக்கரம்மாவின் தயவால் வாரம் ஒரு புத்தகம் என்று கடன் வாங்கி படிக்க ஆரம்பித்தது தான் பிள்ளையார் சுழி.
எனக்கு முதல் முதலில் படிக்கக் கிடைத்த (தரப்பட்ட?) புத்தகம் "இலக்கிய கட்டுரைகள்" என்ற தலைப்பிட்ட பல இலக்கிய ஆய்வு கட்டுரைகளின் தொகுப்பு. ஆசிரியர் முனைவர்.அரங்கசாமியோ அழகிரிசாமியோ. கட்டுரைத் தலைப்புகள் "சீவகன் காமுகனா?" (அதாங்க நம்ம சீவகசிந்தாமணியின் நாயகன்), "கழா அத்தலையார் - கழுவாத தலையை உடையவரா?" என்று இலக்கியச் சாறு வழிந்தோடி புத்தகத்தை நனைத்திருந்தது. நல்ல ராசி தான் என்று தலையில் அடித்துக்கொண்டு அடுத்த புத்தகத்தை கேட்கும் போது, இப்படி சாறு வழியாத புத்தகமாய் பார்த்து தேர்ந்தெடுத்தது பொன்னியின் செல்வன்.
படிக்க ஆரம்பித்து ஒரு வாரத்தில் பழுவேட்டரையரும் ஆழ்வார்கடியான் நம்பியும் வந்தியதேவனும் கனவில் வர ஆரம்பிக்க நான் தூக்கத்தில் என்னவோ உழற அடுத்தநாள் மந்திரிக்க வீட்டுக்கே ஆள் கூட்டி வந்துவிட்டார் என் அம்மா. கடைசியில் நான் உளறும் பெயர்களெல்லாம் புத்தகத்தில் வரும் கதாபத்திரங்கள் என்று புரியவைத்து பூசாரியை கிளப்பியது தனிக்கதை.
இது நன்றாயிருக்கிறதே என்று அடுத்தடுத்து தொடர்ச்சியாய் கல்கி, சாண்டில்யனின் பெட்டியில் இருந்த வரலாற்று நாவல்களைக் கேட்டுக் கேட்டு வாங்கிப் படித்துக் கொண்டிருந்தேன். அதற்குள் பத்தாவது பொதுத்தேர்வு
நெருங்க அட்டாரிகிட்ட இனிமேல் போகக்கூடாதுன்னு தடை உத்தரவு போட்டுட்டார் அம்மா. அதன் பின்னர் கல்லூரியின் முதலாம் ஆண்டு வரை பெரியதாக(!!?) எதையும் படிக்கவில்லை.
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஆரம்ப நாட்களில் தான் எஸ். ராமகிருஷ்ணன் விகடனில் "துணை எழுத்தை" ஆரம்பித்திருந்தார்.பொழுது போக்கு என்றிருந்த புத்தக வாசிப்பை மாற்றி வாசிப்பின் அடுத்த தளத்திருக்குக் கொண்டு சென்றது இந்தத் தொடர். நண்பர்களின் பரிந்துரைகள் மூலம் சுஜாதா, ஜெயகாந்தன், கி.ரா, சுந்தர ராமசாமி, இ.பா, அசோகமித்திரன் என்று படிக்க ஆரம்பித்தேன்.
கல்லூரி முடித்து சென்னையில் பணியில் சேர்ந்த நாள் முதல் ஏதாவது ஒரு எழுத்தாளரைச் சந்தித்து விடவேண்டும் என்று பார்பவர்களிடம் எல்லாம் உங்களுக்கு இந்த எழுத்தாளரோட முகவரி தெரியுமா அந்த எழுத்தாளரோட முகவரி தெரியமா என்று கேட்டுத் திட்டு வாங்கியிருக்கிறேன். புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்களைப் பார்க்கலாம் என்று யாரோ சொல்ல, 2007 ஆண்டு புத்தக கண்காட்சியில் ஒரு நாள் காலை முதல் மாலை வரை ஒவ்வொரு புத்தக ஸ்டாலாய் பார்த்து பார்த்து யாரும் சந்திக்காமல் ஒரு பை நிறையப் புத்தகங்களுடன் வீடு திரும்பினேன். இன்று வரை எந்த எழுத்தாளரையும் நேரில் பார்த்ததில்லை.
ஜாப்பனிற்கு வந்துவிட்ட பிறகு ஆரம்பத்தில் புத்தகமாகப் படிக்க வாய்ப்பு
சற்று இல்லாமற்போயிற்று. எல்லாம் கணிணி வழி வாசிப்புத்தான். ஜெ.மோ, எஸ்.ரா, சாரு இணைய தளங்கள், திண்ணை, உயிர்மை, தமிழ் பதிவர்கள் (நன்றி: நண்பர் ஜிகர்தண்டா)என்று வாசிப்பு போய் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தமிழ் புத்தகங்கள் இணைய தளத்தில் விற்பனைக்குக் கிடக்க வாங்குவதற்கு முயற்சித்திருக்கிறேன்.
குறிப்பு: இப்போதும் படித்த பதிவுகளை தூக்கத்தில் நான் உளருவதாக அறை நண்பர்கள் காலையில் எழுந்ததும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
siva,
ReplyDeleteGood one siva..keep writing..
now only i know why u reading anandha vikatan na and also i know lot of thinks about you na nice one keep writing ....
ReplyDelete